தமிழகத்தில் ஒரே நாளில் 669 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 200 ஐ தாண்டி விட்டது. 500 பேருக்கு மேல் வைரஸ் தொற்று உறுதி ஆவது, தமிழகத்தில் 6- வது நாளாக நீடித்தது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 669 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 204ஆக அதிகரித்தது.
வைரஸ் தொற்றால் உறுதி ஆனவர்களில் 5 ஆயிரத்து 195 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 ஆயிரத்து 305 பேர் தனிமை வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஒரே நாளில் 3 பேரை கொரோனா காவு வாங்கியதால், உயிர்ப்பலி 47 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை 53 ஆக நீடிக்கிறது.
கொரோனாவில் இருந்து 135 பேர் குணமடைய , இதுவரை ஆயிரத்து 959 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயது ஆண் ஒருவர், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னையைச் சேர்ந்த 59 வயது ஆண்
ஸ்டான்லி மருத்துவமனையிலும், திருவள்ளூரை சேர்ந்த 55 வயது மற்றொரு ஆண், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனா காவு வாங்கிய 47 பேரில், 28 பேர் சென்னையை சேர்ந்த வர்கள். செங்கல்பட்டில் 4 பேரும், மதுரை, திருவள்ளூர் மற்றும் விழுப்புரத்தில் தலா 2 பேரும் உயிரிழந்தனர். கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பலி ஆகி உள்ளனர்.