தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 172 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் மது விற்பனை, அரசுக்கான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. வழக்கமாக நாள் தோறும் 70 கோடி ரூபாய் முதல் 80 கோடி ரூபாய் வரை மது விற்பனையாகும். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விழா நாட்களில், 120 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை விற்பனையாகும்.
கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் கடைகள் 43 நாள்கள் மூடப்பட்ட நிலையில் நேற்று நேர வரம்புடன் 3 ஆயிரத்து 700 கடைகள் திறக்கப்பட்டன.
சென்னை மண்டலத்தில் 10 கோடியே 16 லட்ச ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 45 கோடியே 67 லட்ச ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 46 கோடியே 78 லட்ச ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 41 கோடியே 56 லட்ச ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 28 கோடியே 42 லட்ச ரூபாய்க்கும் நேற்று மதுவிற்பனை நடந்துள்ளது.