ஈரோடு மாவட்டத்தில் கடந்த 22 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படாததாலும், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணம் பெற்று வீடு திரும்பியதாலும் பச்சை நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களால் அதிகளவில் கொரோனா பாதிப்பைக் கண்ட ஈரோட்டில், 10 மாத குழந்தை, பெண்கள் என 70 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் பெருந்துறையை சேர்ந்த முதியவர் ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில், மற்ற அனைவரும் குணம் பெற்று வீடு திரும்பினர். மாவட்டம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 22 நாட்களில் ஒருவருக்கு கூட நோய் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதன் விளைவாக ஆரஞ்ச் மண்டலமாக இருந்த ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக முன்னேற்றமடைந்துள்ளது.