கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள மாவட்டங்களில் ராணுவ ஊரடங்கு போன்ற முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் முந்தைய 5 வாரங்களில் 570 பேர் மட்டுமே நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில், இந்த எண்ணிக்கையானது கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் நடமாட தொடங்கி விட்டனர்.
இதே நிலை நீடித்தால், கோயம்பேடு சந்தை போல் ஒவ்வொரு மாவட்டமும் கொரோனா மையமாக மாறிவிடும் என ராமதாஸ் அச்சம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில், கடந்த 40 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் கிடைத்த பயன்களில் பெரும்பகுதி வீணாகி விட்டதாக ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.