சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்தும், மேற்கொண்டு எடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.