கொரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் அரசியல் உள்நோக்கமற்று, தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்து, இருபதாக உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு, நூறு, இருநூறாக அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதிகப்படியான பரிசோதனைகள் நடத்தப்படுவதால், கொரோனா பாதிப்புகள் வெளியே தெரிய வருகிறதா அல்லது நோய் பரவல் கட்டுப்படுத்தப்படவில்லையா எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நோய் தொற்று உடையவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இணையாக, தடுப்பு நடவடிக்கையிலும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய சூழலில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து, எல்லாம் சரியாகி வருகிறது என்ற தோற்றத்தை உருவாக்க அரசு நினைப்பதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.