உலகப்புகழ்பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது.
திருநெல்வேலி அல்வா, பழனி பஞ்சாமிர்தம் வரிசையில் 34ஆவது பொருளாக கோவில்பட்டி கடலைமிட்டாய் இந்த சிறப்பை பெற்றுள்ளது.
கரிசல் மண்ணில் விளையும் நிலக்கடலைக்கு இயற்கையிலேயே அதிக இனிப்புச்சுவை இருக்கும் என்று கூறும் நிலையில் அதை கொண்டு தயாரிக்கப்படும் மிட்டாய்கள் வெளி மாவட்டங்கள், வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன்பெயரை பயன்படுத்தி போலியான கடலை மிட்டாய்கள் விற்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் முறையிட்டதையடுத்து 2014 ஆம் ஆண்டு அப்போதைய கோவில்பட்டி சப்-கலெக்டர் விஜய கார்த்திகேயன் மூலம் கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
இதற்கு மத்திய அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளதால் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.