நெய்வேலி துணைமின் நிலையம் - கடலங்குடி இடையே 77 கிலோமீட்டர் நீளமுள்ள புதிய மின்பாதை செயலாக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையேயும் ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருந்த பணிகளின் இறுதிக்கட்டப் பணிகள் போர்க்கால வேகத்தில் கடந்த ஒருவாரக் காலமாக மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க ஏதுவாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
நெய்வேலி - கடலங்குடி மின்பாதைத் திட்டம் நூறு கோடியே 82 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
நெய்வேலி - டெல்டா மாவட்டங்களுக்கு இடையேயான இரண்டாவது மின்வழித்தடமான இதன்மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 230 கி.வோ மின்பாதைகளை நெகிழ்திறனுடன் இயக்கவும், மின்னழுத்தத்தை மேம்படுத்திச் சீராக வழங்கவும் முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.