கொரோனா வைரஸ் தொற்றை அறிவிக்கத்தக்க நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939ன் 62வது பிரிவின் படி அறிவிக்கத்தக்க நோயாகவும், பிரிவு 76ன் படி தமிழகம் தொற்று பரவ வாய்ப்புள்ள இடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகள், மதம் சார்ந்த இடங்கள் என அனைத்திலும் சோப், தண்ணீர் வசதியுடன் கூடிய கைகழுவுமிடம் அமைக்கவும், அங்கு வந்து செல்வோர் கை கழுவுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் குறித்து 24 மணி நேரத்துக்குள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுவோருக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் தொற்று நோய் சட்டம் 1987 ஆகியவற்றின் கீழ் 6 மாதம் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.