தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக, தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, அத்தியாவசிய உற்பத்தி மற்றும் தொடர் செயல்பாடுகள் தவிர, பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மத்திய அரசு தற்போது மேலும் சில தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும், நோய்த்தொற்று பரவாமல் இருக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் தொழில் அதிபர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தொழில் துறை செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நோய் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாகவும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாகவும் முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் சில தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது தொடர்பாக நிதி செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 21 நபர்கள் கொண்ட வல்லுனர் குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.