சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிந்த முதலமைச்சர், உரிய பாதுகாப்புடன் சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இக்கட்டான சூழலில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் முதலமைச்சர் சில கருத்துகளை தெரிவித்தார்.ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியாய விலைக்கடைகளில் மே மாதம் வழங்கப்பட உள்ள விலையில்லா அத்தியாவசிய பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார். அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் அதனை உடனடியாக கொள்முதல் செய்வது குறித்தும், அதற்கான நிதி போதுமானதாக உள்ளதா எனவும் கேட்டறிந்த முதலமைச்சர்,
அத்தியாவசிய பொருட்களை வழங்கும் போது பொதுமக்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற எடுக்க வேண்டிய நவடிக்கைகள் குறித்தும், நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அறிவுரைகள் குறித்தும் அறிவுறுத்தல்கலை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா மற்றும் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.