தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அரசு முடிவெடுத்து ஆணைகள் வெளியிடும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக் காலத்தில் பொது மக்களின் நடமாட்டத்துக்கும், கடைகளை திறக்கவும், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து மத்திய அரசால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மத்திய அரசு கடந்த 15ம் தேதி வெளியிட்ட ஆணையில், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆதலால் இதுகுறித்து ஆலோசனை அளிக்க மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த குழு, தன் முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடம் நாளை தெரிவிக்க உள்ளது என்றும், இந்தக் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இது குறித்து தமிழக அரசு ஆணைகள் வெளியிடும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.