கொரோனா வைரஸ் பாதித்து, மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை பயன்படுமா என சோதனை அடிப்படையில் முயற்சித்துப் பார்க்கப்பட உள்ளது. இதுகுறித்து விளக்கும் ஒரு செய்தித் தொகுப்பு....
மனித ரத்தத்தில் பொதுவாக சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்த தட்டுகள் உள்ளிட்டவை காணப்படும். இந்த மூன்றையும் வடிகட்டி எடுத்தபின் மீதமிருக்கும் திரவ மூலக்கூறுதான் பிளாஸ்மா என்கின்றனர் மருத்துவர்கள். இந்த பிளாஸ்மா செல்கள், ஆன்ட்டிபாடி (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு புரதங்களை உருவாக்குகின்றன.
கொரோனா நோயில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து, பிளாஸ்மா செல்கள் உருவாக்கும் ஆன்ட்டிபாடிகளை பிரித்தெடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலம் வைரசை எதிர்த்துப் போராடும் திறனை இழந்த, மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை முயற்சித்துப் பார்க்கப்படும். இந்த முறை பயனளிக்கும் என்பதற்கு எவ்வித வலுவான ஆதாரங்களும் இல்லை என்ற நிலையில், அது கொரோனா சிகிச்சையில் பயன்படுமா என்பதை கண்டறிய சோதனை அடிப்படையில் முயற்சி செய்து பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் ஸ்பானிஷ் ஃப்லு, பன்றிக்காய்ச்சல், எபோலா உள்ளிட்ட பிற நோய்களுக்கு, ஆரோக்கியமான மனிதர்களிமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மாவை உடலுக்குள் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்குப் பரிந்துரைக்கப்படும் கான்வலசண்ட் பிளாஸ்மா (convalescent plasma) சிகிச்சை முறையில் கொரோனாவில் இருந்து குணமாகி, 14 முதல் 28 நாட்கள் வரை கண்காணிப்பில் இருந்த நபர்களின் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்மா மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக அனுமதி கிடைத்த பின் தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை முயற்சிக்கப்படும் என்றும், அதற்கான கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.