வரும் 20ஆம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர், சிவப்பு மண்டலத்தில் வரும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை நடத்தினார். காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சருடன், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை காவல் ஆணையர், வருவாய் நிருவாக ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளாக குறிப்பிடப்படும் 22 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பிற மாவட்டங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளை செயல்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் கொரோனா தடுப்பிற்காக தொடக்கத்திலிருந்தே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவாக பட்டியலிட்டார். தமிழ்நாட்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3 ஆயிரத்து 801 வெண்டிலேட்டர்கள் உள்ளன என்றும், 65 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்களும், 3 லட்சம் என்.95 மாஸ்க்குகள் இருப்பில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 27 கொரோனா பரிசோதனை மையங்கள் மூலமாக, நாள் ஒன்றுக்கு 5,590 மாதிரிகளை பரிசோதனை செய்யலாம் எனவும், கொரோனா பரிசோதனைக்கான 1,95,000 பிசிஆர் கிட்டுகள் இருப்பில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா பரவலின் தீவிரத்தை பொறுத்து 3 வண்ண குறிகளின் கீழ் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்றும், சிவப்பு வண்ணத்தால் குறிப்பிடப்பட்ட அதிதீவிர பாதிப்புள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் முதலமைச்சர் கூறினார். வரும் 20 ஆம் தேதி முதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த குழு கொடுக்கும் அறிக்கைகளை பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மட்டும் தான் நோயை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், அரசின் நடவடிக்கைகளை திமுகவினர் குறை சொல்வது வேதனையளிக்கிறது என்றார்.