அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவுவதற்கு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்க கூடாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உதவலாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியே உதவிகள் வழங்கப்படுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல் உதவிகள் வழங்க ஏற்கனவே அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளதாகவும், ஏன் நேரடியாக உதவக் கூடாது என விளக்கம் அளித்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை கேட்ட நீதிபதிகள் அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், 48 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.