தமிழ்ப் புத்தாண்டையொட்டித் தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரி லால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தொடங்குவதன் அடையாளமாக ஆண்டுதோறும் சித்திரை மாத முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது நமது பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றின் பெருமையை விளக்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தாண்டு மாநிலத்துக்கும் மக்களுக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தொன்மையிலும், பன்முகத்தன்மையிலும், ஈடு இணையில்லாப் பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் பெருமக்கள் பன்னெடுங்காலமாய்ச் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தாண்டில், தமிழர்களின் இல்லங்களில் நலமும் வளமும் பெருகட்டும், தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும், வாழ்வில் இன்ப ஒளி பெருகட்டும் என வாழ்த்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இயற்கையை மதித்து நடந்து, சுற்றுச்சூழலைக் காப்போம் எனச் சித்திரைத் திருநாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார். உழவுக்கு முன்னுரிமை அளித்து மக்கள் நிறைவான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வதை உறுதி செய்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், சார்வரி ஆண்டு தமிழக மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நல்ல ஆண்டாக அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டில் ஏழை எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும் ஏற்றமிகு வாழ்வும் நம்பிக்கையும் வளர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.