ஊரடங்கு உத்தரவு காரணமக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களிலும், ஈஸ்டர் திருநாளையொட்டிய சிறப்புத் திருப்பலி மக்கள் கூட்டமின்றி மிக அமைதியான முறையில் நடைபெற்றது.
வழக்கமாக மக்கள் கூட்டம் அலைமோதும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில், கொரோனா முன்னெச்சரிக்கையாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் 2 பங்கு தந்தைகளுடன் பேராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 12 மணியளவில் பேராலயத்தில் சிலுவைகொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி வண்ண விளக்குகளுடன் நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.
இதேபோல், நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் 3 பங்குத்தந்தைகள் மட்டுமே கலந்து கொண்ட ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், கொரோனா நோய்தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வர வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்திலும் பக்தர்கள் யாரும் இல்லாமல், பங்குத் தந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தேவாலயத்தில் நடைபெற்ற திருப்பலி முழுவதும் முகநூலில் நேரலை செய்யப்பட்டதை கண்டு, ஏராளமான பக்தர்கள் வீட்டில் இருந்தவாறே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.