தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், ஒ.எம்.ஆர் சாலை, வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
இதே போன்று சேலம், கோவை, விழுப்புரம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூரில் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையின் தடுப்பு ஹீட்டுகள் மழையால் சாய்ந்தன. இதனால் காய்கறி மூட்டைகள் மழையில் நனைந்தன.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே மழையின் போது மின்னல் தாக்கியதில் பருதிபுரத்தைச் சேர்ந்த மணி என்பவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆயிலவாடி மற்றும் மழையூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது.