ஊரடங்கால், ஒட்டுமொத்த மக்களும் வீடுகளில் முடங்கி கிடக்க, தடைகள் பல கடந்து, பால் விநியோகிக்கும் பணியில் ஆவின் ஊழியர்கள் மிகவும் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆவின் ஊழியர்கள் குறித்து, அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு
காலையில் எழுந்ததும் ஒரு கையில் காபி- மற்றொரு கையில் நாளிதழ் என ஒவ்வொருவரும் அன்றைய பணியை துவக்குகிறோம். ஆனால், நாம் விழிப்பதற்கு முன்பாக-சூரியன் உதயமாவதற்கு முன்பாகவே நம் இல்லம் தேடி வந்து விடுகிறது, பால்.
ஊரடங்கை காரணம் காட்டி, தனியார் பால் நிறுவனங்கள் பல, தங்கள் பணிகளையெல்லாம் முடக்கிக் கொள்ள, எத்தகைய சூழல் உருவானாலும் மக்கள் பணியே முதன்மையானது என எண்ணி, களத்தில் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள் ஆவின் ஊழியர்கள்.
விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்படும் பால், உரிய முறையில் பதப்படுத்தப்பட்டு, பின்னர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. ஒரு ஷிப்ட்டுக்கு 300 பேர் வீதம் ஆவின் ஊழியர்கள், விடுமுறையின்றி உழைத்து வருகிறார்கள்.
வழக்கத்தை விட, தற்போது நாளொன்றுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் பால் பாக்கெட்டு கள் வரை, கூடுதலாக விற்பனை ஆகின்றன. கொரோனா வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், முதியோர், ஆதரவற்றோர் முகாம்களில் தங்கி இருப்பவர் களுக்கும் ஆவின் பால், இலவசமாக வழங்கப்படுகிறது.
தடைகள் பல கடந்து, மக்களின் மனங்களில் பால் வார்த்து வரும் ஆவினுக்கு, வருங்காலத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என அதன் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஒருபக்கம் தீவிரமாக உழைத்து வருகிறார்கள். மற்றொருபுறம் பாதுகாப்பு பணியில் காவல்துறையினரும், தூய்மை பணியில் துப்புரவு பணியாளர்களும் இரவு - பகல் பாராது களத்தில் சுழன்று உள்ளனர்.
இவர்களுக்கு இணையாக மக்களுக்கு அத்தியாவசிய தேவையான பால் விநியோகிக்கும் பணியில், ஆவின் ஊழியர்கள், ஈடுபட்டு, மக்களின் மனங்களை கவர்ந்துள்ளனர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை நிரூபித்துள்ளது, தமிழக அரசின் ஆவின் நிர்வாகம்.