அரக்கோணம் அருகே கவனக்குறைவால் கடலை மாவுடன், பூச்சி மருந்து கலந்து போண்டா செய்து சாப்பிட்ட புதுமண தம்பதி பலியான நிலையில் மாமனார்- மாமியார் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
சாலையில் மட்டுமல்ல, சமையலிலும் கவனம் குறைந்தால், விபரீதம் நிகழும் என்பது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி, லட்சுமி தம்பதியரின் மகன் சுகுமார்... இவருக்கும், பாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் முடிந்தது.
சம்பவத்தன்று பாரதி நேற்று முன்தினம் வீட்டில் இனிப்பு போண்டா செய்வதற்காக, தனது மாமனார் பெரியசாமியிடம் கடலை மாவு வாங்கி வரக் கூறியுள்ளார். கடைவீதிக்கு சென்ற பெரியசாமி கடலை மாவுடன் மிளகாய் தோட்ட பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக பூச்சிக்கொல்லி பவுடரையும் சேர்த்து வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இரண்டையும் ஒரே இடத்தில் வைத்து விட்டு பெரியசாமி வெளியில் சென்றுள்ளார். இரண்டும் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டதால் இரண்டையும் கடலை மாவு என்று நினைத்து, மருமகள் பாரதி, ஒன்றாக கலந்து போண்டா சுட்டுள்ளார்.
தனது கணவர் சுகுமார், மாமியார் லட்சுமி ஆகியோருடன் சேர்ந்து புதுப்பெண் பாரதியும் சுட சுட நிறைய போண்டாக்களை சாப்பிட்டதாக கூறப்படுகின்றது. சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த மாமனார் பெரியசாமிக்கும் போண்டாவை சாப்பிட கொடுத்துள்ளார். போண்டாவில் இருந்து மருந்து வாசனை வீசுவதாக கூறிய பெரியசாமி, போண்டாவை மிச்சம் வைத்துள்ளார். வீட்டில் சமையல் அறையில் கடலை மாவு பாக்கெட்டும், பூச்சி மருந்து பாக்கெட்டும் காலியாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியசாமி போண்டாவில் பூச்சி மருத்து கலக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தார்.
அதற்குள்ளாக பூச்சி மருந்து போண்டாவை சாப்பிட்ட மருமகள் பாரதி, கணவர் சுகுமார், மாமியார் லட்சுமி ஆகிய மூவரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக் கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அங்கிருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிபாரிசு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை மாலை புதுப்பெண் பெண் பாரதியும், செவ்வாய்கிழமை மதியம் கணவர் சுகுமாரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பூச்சி மருந்து போண்டா சாப்பிட்ட மாமனார் பெரியசாமி, மாமியார் லட்சுமி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அரக்கோணம் தாலூகா காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றார். பெரியசாமியின் மற்ற 2 மகன்களும் வெளியில் சென்றதால் போண்டா சாப்பிடாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாக கூறப்படுகின்றது.
உணவுப்பொருளுடன் பூச்சி மருந்தை சேர்த்து வாங்கி வந்தது முதல் தவறு என்றால், அதனை விபரம் சொல்லாமல் சமையல் அறையில் வைத்து சென்றது மிகப்பெரிய தவறு என்றும் அந்த பாக்கெட்டில் இருப்பது கடலை மாவா?, அல்லது பூச்சிக்கொல்லி பவுடரா? என்பதை கூட பார்க்காமல், வாசனையையும் நுகராமல் அதில் போண்டா சுட்டது கவனக்குறையின் உச்சகட்டம் என்கின்றனர் காவல்துறையினர்..
அதே நேரத்தில் பாரதி முதல் போண்டா சாப்பிடும் போதே அதன் சுவையில் தெரிந்த மாறுதலை வைத்து குடும்பத்தினரிடம் எடுத்துக்கூறியிருந்தால் மற்றவர்கள் உஷாராகி இந்த உயிரிழப்புக்களை தடுத்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஊரடங்கால் பேக்கரி மற்றும் பலகாரக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே, புதிதாக பலகாரம் தயாரிக்க முனைப்பு காட்டுவோர் கவனமாக இல்லாமல், டிவி பார்க்கும் மும்முரத்தில் எதையாவது எடுத்துபோட்டு சமைத்தால் அது உயிருக்கே கேடாக அமைந்துவிடும்..., சாலையில் மட்டுமல்ல சமையலிலும் கவனக்குறைவு உயிருக்கே எமனாகிவிடும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!