கொரோனா தொற்று உள்ளதா என்பதை சில நிமிடங்களில் கண்டறிவதற்காக அறிமுகமாகியுள்ள ரேபிட் டெஸ்ட் எனும் கருவி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.....
கொரோனா உள்ளதா என்பதைக் கண்டறிய ஒருவரது ரத்தம், சளி மாதிரிகளை சோதனை நடத்தி ரிசல்ட் வெளியாக 24 மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. ஸ்கிரீனிங் மூலம் கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி, தேவை என்றால் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், துரிதமாக பரிசோதனை மேற்கொள்ள இந்த ரேபிட் டெஸ்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறு உபகரணங்கள் இல்லாமல் 10 முதல் 30 நிமிடங்களில் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
இந்த ரேபிட் டெஸ்ட் சாதனத்தின் வடிவமைப்பு குறித்தும் அது எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்தும் பிரபல நியூபெர்க் எர்லிச் (Neuberg Ehrlich) பரிசோதனை நிலையத்தின் தொழில்நுட்ப இயக்குநர் சீனிவாசன் விளக்குகிறார்.
இந்த டெஸ்ட்டில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தி, தேவை எனில் வேறு சில சோதனைகள் நடத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சமூகத்தில் வைரஸ் தொற்று வேகமாகப் பரவாமல் தடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் பாதிப்புகளை விரைவாக கண்டறிய ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் சாதனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.