கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் அத்தியாவசியப்பொருட்கள் விற்பனையகங்களில் மறைத்து விற்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், காய்கறி வாகனங்களில் மறைத்து தமிழக-கேரள எல்லை வழியாக குட்கா கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் 5 கடைகளில் குட்கா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா, புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், பல ஆண்டுகளாக குட்கா விற்பனை செய்து வந்ததும் மதுக்கடைகள் தற்போது அடைக்கப்பட்டுள்ளதால் குட்கா, புகையிலைப்பொருட்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளதும் தெரியவந்தது.