விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் 309 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை மட்டும் 102 பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411-ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்கனவே மதுரையில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டாவதாக விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 51 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட அளவில் இது முதல் பலியாக பார்க்கப்படுகிறது. இவர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர் என தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்றவர்கள் 64 பேர் என கணக்கிடப்பட்டு, 59 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் சென்று வந்ததாக 2 ஆயிரத்து 70 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.