அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என பெரு நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இந்தியாவின் அரசுத் துறை நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகை சில லட்சம் கோடி ரூபாய்கள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மின்வழங்கல் தடைபடாமல் இருக்க, மின் வழங்கல் நிறுவனங்கள் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையைச் செலுத்த 3 மாதக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு, அரசின் மின்வழங்கல் நிறுவனங்கள் பிப்ரவரி மாதத்திலேயே 88 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டி இருந்தது. இதேபோல் உர நிறுவனங்களுக்கு மானியமாக மத்திய அரசு 60 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், நிலுவையில் உள்ள தொகையையும் விரைவில் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.