தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 144தடை உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினர்.
சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் இளைஞர்களை பிடித்த காவல்துறையினர் உறுதிமொழி எடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
எழில் நகர், மீனாம்பாள் சாலையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் காரணமின்றி வெளியே சுற்றியது தெரிய வந்தது.இதனை அடுத்து அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் முக கவசம் அணியாமலும், அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வந்தவர்களையும் காவல் துறையினர் முதுகில் லட்டியால் அடித்தும் எச்சரிக்கை செய்தும் திருப்பி அனுப்பினர்.
பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வந்த வாகனத்தில் வந்தவர்களை விசாரித்த போலீசார் அவர்கள் பத்திரிகையாளர் இல்லை என்று தெரிந்ததும் ஸ்டிக்கரை அழித்து எச்சரித்து அனுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டை நகர் முழுவதும் காவல்துறையினர் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒசூர் பகுதியில் தினந்தோறும் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 2 டிரோன் கேமராக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதன் மூலம் அவசியமின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.