மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், டயாலிசிஸ் சிகிச்சை ஆகியவற்றை மறுக்காமல் வழங்க வேண்டும் எனத் தனியார் மருத்துவமனைகளைத் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் அனைத்துத் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பேறுகாலப் பின் கவனிப்பு, டயாலிசிஸ், கீமோதெரபி, நரம்பியல் நோய்க்கான மருத்துவம் ஆகியவற்றை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
அந்தச் சேவைகளை வழங்க மறுப்பது முறையற்றது எனவும், மருத்துவக் கவுன்சிலின் விதிகளுக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக வருவோருக்கு மேற்கண்ட சேவைகளை வழங்க மறுக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அரசின் இந்த அறிவுறுத்தலை மதிக்காவிட்டால், உரிய சட்ட விதிகளின்படி மருத்துவமனையின் பதிவு ரத்துசெய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.