டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்று திரும்பிய பலர் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய திருவள்ளூரைச் சேர்ந்த ஐம்பது பேர் அடையாளம் காணப்பட்டு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பூந்தமல்லியில் உள்ள சிறப்பு மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.
பத்தியால்பேட்டையைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அப்பகுதி தீவிர கண்காணிப்பில் உள்ளது.
டெல்லியில் இருந்து திரும்பிய கும்பகோணம் பெரிய கடை தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருடன் வேலை செய்த 19 பேர் தஞ்சை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த 11 நபர்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் குடும்பத்தினரோடு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.