தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள், மருந்து உற்பத்தியை ஊக்குவிக்க புதிய சலுகைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உள்நுழைவு வென்டிலேட்டர்கள், என் 95 மாஸ்க்குகள், கொரொனா தடுப்புக்கான வைரஸ் மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள் தனி நபர் பாதுகாப்புக் கவச உடை, பல்வகை அளவுருக்களிலான கணினித் திரைகள் ஆகியவற்றின் உற்பத்தியை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களோ புதிய நிறுவனங்களோ தமிழ்நாட்டில் ஜூலை 31-க்குள் தொடங்கினால் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகைகள் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
மொத்த மூலதனத்தில் 30 சதவீத மானியம் 20 கோடி ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
திட்ட அனுமதி உள்ளிட்ட அனுமதிகளுக்கு காத்திருக்காமல் உற்பத்தியை தொடங்கலாம் என்றும், பின்னர் ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகளை பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் செயல்பாட்டு மூலதனக் கடன் வட்டியில் 6 சதவீத மானியம் உள்ளிட்ட சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த நான்கு மாத உற்பத்தியில் 50 சதவீதத்தை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கொள்முதல் செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.