தமிழகம் முழுவதும், குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையுடன் இலவச ரேஷன் பொருள்கள் விநியோகம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஏழைமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி, ஏப்ரல் மாதத்திற்கான சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது.
அதன்படி நிவாரண நிதி மற்றும் பொருட்கள் விநியோகம் இன்று தொடங்கி 15ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிவாரண நிதிக்கான டோக்கன்களை வாங்க, ரேசன் கடைகளில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் குவிந்ததை அடுத்து, ஊழியர்களே வீடு வீடாக டோக்கன்களை வழங்குவார்கள் என்றும், இதற்காக ரேஷன் கடைகளுக்கு வரவேண்டாம் எனவும் அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு ஒவ்வொரு ரேஷன் கடையிலும் 100 பேர் வீதம் நிவாரண நிதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து நேரடியாக பொருட்களை நியாய விலைக் கடைகளில் வாங்கவும், சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டோக்கன் பெறாதவர்கள் அதுகுறித்து கடை விற்பனையாளர்களிடம் தெரிவிக்கலாம் என்றும், கடைகளில் கூட்டமாக நிற்பனைத் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.