அரசு சார்பில் வழங்கப்படவுள்ள 1000 ரூபாய் நிவாரண நிதிக்கான டோக்கன்களை வாங்க, ரேசன் கடைகளில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் குவிந்ததை அடுத்து, வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில், ரேசன் கடையில் நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வாங்க குவிந்த மக்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. அக்கூட்டத்தில் தென்பட்ட பெரும்பாலானோர், பாதுகாப்பு முக கவசமும் அணியவில்லை.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ரேஷன் கடையொன்றில், ஆண்கள், பெண்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் டோக்கன் வாங்க குவிந்தனர். கொரோனா குறித்த அபாயம் இல்லாமலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமலும் பொதுமக்கள் இதுபோல நடந்துகொள்வது ஆபத்தை விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
சேலம் பகுதியில் உள்ள சில ரேசன் கடைகளிலும் ஏராளமான மக்கள் டோக்கன் வாங்க திரண்டனர். இவர்களில் பலர் முக கவசங்களை அணியாததுடன், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் கூட்டம் கூடினர். கொரோனா ஆபத்தை உணராமல் திரண்டதைக் கண்டு அங்கு வந்த போலீசார், இடைவெளிவிட்டு நிற்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தினர்.
இந்த நிலையில், தமிழக அரசின் கொரோனா உதவி நிதி 1000 ரூபாய் மற்றும் விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்கள் வீடுவீடாக வினியோகிக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக மக்கள் கூட்டம் கூட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் வழங்கப்படும் 1000 ரூபாய் மற்றும் விலையில்லாப் பொருட்களை பெற மக்கள் முண்டியடிப்பதைத் தவிர்க்க டோக்கன் முறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
டோக்கன்களைப் பெறவும் மக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்தால் கூட்டம் சேரும் என்பதால் ரேஷன் கடை ஊழியர்களே வீடுவீடாகச் சென்று வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.