பெரம்பலூர் அருகே தனியார் தொழிற்சாலையில் வேலை செய்த வடமாநிலத்தவர்களால் 2 கிராமங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நாரணமங்கலம் கிராமத்தில் இயங்கி வரும் எம்ஆர்எஃப் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் அங்குள்ள நாரணமங்கலம், விஜயகோபாலபுரம் உள்ளிட்ட 2 கிராமங்களில் வாடகைக்கு வீடு மற்றும் அறைகள் எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இவர்களில் பலர் சமீபத்தில் சொந்த மாநிலங்களுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் தனி இடத்தில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
மேலும் அந்த 2 கிராமங்களிலும் அவர்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் அருகே வசித்தவர்கள் என அனைவரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.