கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா தனிவார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் மீன்பிடி தொழில் செய்த ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தை சேர்ந்த 66 வயது முதியவர் ஒருவர் அண்மையில் ஊர் திரும்பினார்.
காய்ச்சல், இருமல் என கொரோனா அறிகுறி இருந்ததால் ஆசாரி பள்ளத்திலுள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள கொரோனா தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்த நிலையில், தனிவார்டில் இன்று காலை திடீரென அவர் உயிரிழந்தார்.
அதே தனிவார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த திருவட்டாறை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கும், முட்டம் பகுதியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தைக்கும் ரத்த மாதிரி உள்ளிட்டவை பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 2 பேருக்கும் தற்போது வரை கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் அவர்களும் இன்று திடீரென மரணமடைந்தனர்.
ஏற்கெனவே கோடி முனையை சேர்ந்த இளைஞர் ஒருவரும், நாகர்கோயிலை சேர்ந்த பெண்ணும் ஒருவரும் இதே வார்டில் கொரோனா உறுதியாகாத நிலையில் உயிரிழந்தனர்.
இந்த 2 பேருடன் புதிதாக பலியோன 3 பேரையும் சேர்த்தால், கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா தனிவார்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
இன்று பலியான 3 பேரில் ஒருவர் நிமோனியாவாலும், இன்னொருவர் சிறுநீரகம் தொடர்பான நோயாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், குழந்தை ஹாக்கியோ பெட்ரோ சிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது என்றும் தெரிவித்துள்ள சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், ஆதலால் 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்ததாக கருத முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.