தமிழகத்தில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 35 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், மதுரையில் கொரோனா பாதிப்பால் இறந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும், ஈரோட்டில் சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டவருடன் தொடர்புடைய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேபோல, சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சென்னையைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக, தமிழகத்துக்கான தேசிய சுகாதார பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.