Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் மூலம், விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் உதவி மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவப் பொருட்களுக்கான சான்றிதழ்களை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், அரசு மருத்துவமனை முதல்வர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையின் துணை இயக்குநர்கள் ஆகியோர் வழங்குவர்.
அத்தியாவசியப் பொருட்களை நகர்வு செய்யும் தனியார் வாகனங்களுக்கும், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியார் பணியாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகம், காவல் துறை இணைந்து, அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனங்களான Grofers, Amazon, Big basket, Flipkart, Dunzo போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை மற்ற நிறுவனங்களும், அந்தந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைகளும், கூட்டுறவு விற்பனை அங்காடிகளும், வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் மூலம், விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான தடை தொடரும்.
காய்கறி, பழங்கள், முட்டை போன்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றின் நகர்வு அனுமதிக்கப்படுகின்றது. வேளாண் விளை பொருட்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
கால்நடை, கோழி, மீன், முட்டை, கால்நடைத் தீவனம் ஆகியவற்றின் நகர்வுகளும் அனுமதிக்கப்படுகின்றது. அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிவாரணம் முழுமையாக பயனாளிகளை சென்றடைவதையும், இவை வழங்கும்போது சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் முழுமையாக பின்பற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், அந்தந்த மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்றவாறு, தேவைப்படின் நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை அவரவர் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்க மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்யலாம். நோய்த் தொற்றினை தடுக்கும் விதத்தில், கை ரேகை பதிவு செய்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை தற்போது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
"விழித்திரு - விலகி இரு - வீட்டிலேயே இரு" என்ற கோட்பாட்டினை இந்த சவாலான நேரத்தில் பொது மக்கள் அனைவரும் தீவிரமாகக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.