கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் பொருட்டு நேற்று பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவால் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்சியில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததை தொடர்ந்து எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மாவட்டத்தை சுற்றி தற்காலிமாக 14சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் கார், வேன், லாரி போன்ற வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைவதற்கோ, வெளியேறுவதற்கோ அனுமதிக்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேருந்து நிலையத்தில் நின்று இருந்தவர்களுக்கு போலீசார் சிறப்பு பேருந்து ஏற்படுத்தி அவர்களை தங்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் காவல்துறையினர் மாலை 6 மணி அளவில் பேருந்து நிலையம் சி.எல் சாலை உள்ளிட்ட முக்கிய வீதியில் காவல் ரோந்து வாகனத்தில் ஒலி பெருக்கி வைத்து கடைகளை அடைக்க வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஹோட்டல்கள் மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் வாணியம்பாடி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டது.மேலும் காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட எல்லையான பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை கூட்டு சாலை பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைத்து எல்லையை மூடினர்.கொரோனா பாதிப்பைத் தடுக்க சேலம் மாவட்டத்தில் மல்லூர், தீவட்டிப்பட்டி, கொளத்தூர், பெரும்பள்ளம் ,
நத்தக்கரை, பள்ளிபாளையம் ஜங்ஷன், ஆட்டையாம்பட்டி மலையம்பாளையம், கருமந்துறை ,உள்ளிட்ட 21இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
அதுபோல திருப்பூர், கள்ளக்குறிச்சி,திருவெறும்பூர், திருவள்ளூர், சங்கரன்கோவில், பரமத்திவேலூர், பரமக்குடி, மயிலாடுதுறை, சீர்காழி,குளித்தலை கரூர், கன்னியாகுமரி, ஈரோடு, காஞ்சிபுரம்,அறந்தாங்கி, தேனி உள்ளிட்ட இடங்களிலும் 144 தடை உத்தரவு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டது