கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் மக்கள் ஊரடங்கை பொதுமக்கள் செவ்வனே கடைபிடித்து வருகின்றனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் சாலைகள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது.
கரூரில் அனைத்து இடங்களிலும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் அதிகாலையில் செயல்பட்ட ஒரு சில தேநீர் கடைகள், பூக்கடைகள் நகராட்சி அதிகாரிகளின் உத்தரவையடுத்து மூடப்பட்டன. ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், தினசரி சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
கோவையில் காந்திபுரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கிராஸ் கட் சாலை, நஞ்சப்பா சாலை, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்சி என அனைத்து வகையான போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை குமாரசுவாமி கோவிலில் மக்கள் ஊடரங்கையொட்டி மணமக்கள், உறவினர்கள் 4 பேர் என மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால், உறவினர்கள் ஆரவாரமின்றி மிக எளிமையாக பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுய ஊரடங்கை மக்கள் கடைபிடித்து வரும் நிலையில் பிரதான சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்கள் அனைத்தும் வெறிசோடின. அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் சாலையில் செல்கின்றன.
சேலம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஜங்ஷன் நிலையம் உள்ளிட்ட இடங்கள் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிசோடியது. ஒரு சில இடங்களில் மீன் மற்றும் கறிக்கடைகள் திறந்திருந்தன. பெட்ரோல் பங்க்குகள் குறைந்த ஊழியர்களுடன் வழக்கம்போல் செயல்பட்டது.
நாமக்கலில் கடைகள், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிசோடின. மக்கள் ஊரடங்கையையும் மீறி சாலைகளில் செல்லும் ஒரு சிலரை மடக்கி பிடித்து, வீட்டிலேயே இருக்க போலீசார் அறிவுரை வழங்கினர்.
திருப்பூரில் உள்ள அனைத்து பனியன் நிறுவனங்களும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகளான புஷ்பா ஜங்சன், குமரன் சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்டவை ஆள்நடமாட்டம் இன்றி காணப்படுகிறது. வணிக பகுதிகளான காதர்பேட்டை, நெசவாளர் காலனி உள்ளிட்ட இடங்களும் வெறிசோடின.
மக்கள் ஊரடங்கையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையான பால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. லாரிகள், ஆட்டோக்கள் ஆகியவை இயங்காத நிலையில், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேசமயம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிற சூழலில், தூய்மை பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுய ஊரடங்கை முன்னிட்டு மக்கள் யாரும் வெளியே வராததால் ஓசுரில் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. பிரதான சாலைகளான தாலுகா அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, இராயக்கோட்டை சாலை, பாகலூர் சாலை ஆகியவை போக்குவரத்து இன்றி அமைதியாக காட்சியளிக்கின்றன. தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியிலும் இரண்டு மாநிலங்களிலிருந்து வாகனங்கள் இயக்கப்படவில்லை.
திண்டுக்கலில் மக்கள் ஊரடங்கையொட்டி பேருந்து நிலையம், கடைவீதிகள் என அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கோவில் உள்ளிட்ட வழிப்பாட்டு தலங்கள் இருக்கும் அனைத்து பகுதிகளும் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. மக்கள் ஊரடங்கால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ராஜேஷ் கண்ணன், உமா மகேஸ்வரி ஆகியோரின் திருமணம் ஆடம்பரமின்றி அமைதியாக நெருங்கிய உறவினர்களை மட்டும் கொண்டு நடைபெற்றது.
விழுப்புரத்தில் பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் சில கடைகள் மட்டும் திறந்துள்ளன. மக்கள் ஊரடங்கையொட்டி பேருந்து, டாக்சி, ஆட்டோ போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பேருந்து நிலையங்கள், முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிசோடின.
திருவாரூரில் மக்கள் ஊரடங்கையொட்டி பேருந்துகள், ஆட்டோக்கள் என எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. பேருந்துகள் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில், பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கடை வீதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவசரகால சிகிச்சை பிரிவுக்கு வருபவர்கள் மட்டுமே கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.
மக்கள் ஊரடங்கையொட்டி கன்னியாகுமரியில் கோயில்களில் அதிகாலையிலேயே பூஜைகள் செய்யப்பட்டு 7 மணிக்கு முன்பே நடை சாத்தப்பட்டன. தேவாலயங்களில் திருப்பலி ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் சென்ற ஒரு சிலருக்கும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கேரளாவில் இருந்து வந்த வாகனங்களை எல்லையிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய போலீசார், அதில் வந்த தமிழக பயணிகளை மட்டும் பரிசோதனைக்கு பிறகு அனுமதித்தனர்.
தேனியில் சுய ஊரடங்கை மக்கள் அனைவரும் கடைப்பிடித்து வரும் நிலையில் முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நகரில் ஒரு சில இடங்களில் மட்டும் அத்தியாவசியப்பொருட்கள் விற்கும் கடைகள், கறிக்கடைகள் செயல்படுகின்றன. ஆங்காங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சாலையில் செல்லுவோருக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுய ஊரடங்கை மக்கள் கடைபிடித்து வரும் நிலையில் பிரதான சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்கள் அனைத்தும் வெறிசோடின. அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டும் சாலையில் செல்கின்றன.
புதுக்கோட்டையில் மக்கள் ஊரடங்கையொட்டி சாலையோர கடைகள், உழவர் சந்தை, பூ மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.இதனால் கடைவீதிகளில் கிருமி நாசினி மற்றும் பிலீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் தேநீர் கடைகள் இயங்குகின்றன. பேருந்துகள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படாத நிலையில் அத்தியாவசிய தேவைக்காக ஒரு சிலர் மட்டும் வெளியே வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் வணிக நிறுவனங்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு நகரம் முழுவதும் அமைதியாக காட்சியளிக்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வோரை தவிர, பொதுமக்கள் பெரும்பாலோனார் வீட்டுக்குள்ளேயே இருந்து சமூக இடைவெளியை பின்பற்றினர்.
மக்கள் ஊரடங்கிற்கு இடையே தூத்துக்குடியில் மிகக் குறைந்த உறவினர் முன்னிலையில் மிக எளிமையாக திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முக்கியமான உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது போல் திருமணம் செய்து கொண்டதாக மணமக்கள் தெரிவித்துள்ளனர்.
சுய ஊரடங்கு கடைப்பிடிக்கிற சூழலில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் சில பகுதிகளில் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுகிறது. காய்கறி சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் உட்பட அனைத்து வணிக கடைகளும் மூடப்பட்ட நிலையில் ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. அவர்களை காவல்துறையினர் கடைகளை மூடக் கூறி அறிவுறுத்தினர்.
கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு திருச்சியில் மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறாமல் சுய ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடுகளிலிருந்து இருந்தபடியே தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி வருகின்றனர். அத்தியாவசிய பொருள் விற்பனையகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தஞ்சாவூரில் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மக்கள் ஊரடங்கையொட்டி மூடப்பட்டுள்ளன. பரபரப்பான புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், பிரதான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிசோடியது. பால் விற்பனையகம், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை மட்டும் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மக்கள் ஊரடங்கை முன்னிட்டு வாகனங்கள் எதுவும் இயக்கப்படாததால், சாலைகள் போக்குவரத்தின்றி காணப்படுகிறது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. உணவகங்கள் இல்லாத சூழலில் மருத்துவமனையில் உள்ளவர்களின் உறவினர்களுக்கு நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
மக்கள் ஊரடங்கையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழக -ஆந்திர எல்லையான பள்ளிப்பட்டு ,ஆர்.கே பேட்டை, ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. லாரிகள், ஆட்டோக்கள் ஆகியவை இயங்காத நிலையில், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேசமயம் கடை வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகிற சூழலில், சாலையோரங்களில் தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் ஊரடங்கையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் சுற்றிலும் 4 மாசி வீதிகளில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு முன்பே தல்லாகுளம் கோவிலிலும் தனியார் திருமண மன்றத்திலும் குறைவான உறவினர்கள் முன்னிலையில் திருமணங்கள் நடைபெற்றன. கோரிப்பாளையம் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பரபரப்பான இடங்கள் அனைத்தும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடியது.
சுய ஊரடங்கையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பிரதான சாலைகள், வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் என எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. மேலும் அனைத்து கடைகளும் மூடபட்ட நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
மக்கள் ஊரடங்கையொட்டி விருதுநகரில் அவசர தேவைக்கு செல்வோரை தவிர பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டு முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிசோடி காணப்பட்டது.