மலேசியாவில் இருந்து தமிழகம் திரும்ப முடியாமல் கோலாலம்பூர் விமான நிலையத்தில், 250 -க்கும் மேற்பட்ட தமிழர்கள், தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சிக்கி, தவித்து வருகிறார்கள்.
கடந்த 3 நாட்களுக்கும் மேலாக சொல்லொணாத துயரங்களை சந்தித்து வரும் தமிழர்களை மீட்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உலகில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், கொரானா அச்சம் காரணமாக கடந்த 17 ம் தேதி முதல் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக சுற்றுலா மற்றும் வர்த்தகம் தொடர்பாக மலேசியா சென்ற தமிழர்கள் சுமார் 250 பேர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கி, தவித்து வருகிறார்கள்.
எங்கும் திரும்பி செல்ல முடியாமல், விமான நிலையத்திற்குள்ளேயே, பெட்டி - படுக்கைகளுடன் தமிழர்கள் தங்கி உள்ளனர். குடிக்க தண்ணீர் கிடைக்காமலும், சாப்பிட சாப்பாடு கிடைக்காமலும் தவித்து வரும் தமிழர்கள், தாயகம் திரும்ப உதவுமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை, பலர், சொல்லொணாத துயரங்களை சந்தித்து வருகிறார்கள். அடுத்து, என்ன செய்வது என தெரியாமல், விமான நிலைய வளாகத்தி லேயே சோபா அல்லது தரையில் படுத்து தூங்கும் இவர்கள், தங்களுக்கு விடிவு காலம் பிறக்காதா என கவலையுடன் காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே, மலேசியாவில் சிக்கி தவித்த 200 மருத்துவ மாணவர்கள், ஏர் - இந்தியா விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்த வகையில், கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கி தவித்து வரும் 250 தமிழர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என அவர்களது குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
மத்திய - மாநில அரசுகள், இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு, விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.