கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கப் போதுமான அளவு கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவற்றின் இருப்பை உறுதி செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சுகாதாரத் துறைச் செயலாளரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 19 லட்சம் முகக் கவசங்கள் இருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கிருமி நாசினி, முகக் கவசம் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது மனுதாரரின் வழக்கறிஞர், பள்ளித் தேர்வுகளைத் தள்ளிவைக்க உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.