கொரோனா அச்சத்தால் ஆன்லைன் மூலம் உணவுகளை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர். சுறு சுறுப்பாக உணவு விநியோகிக்கும் டெலிவரி பாய்கள் உணவு ஆர்டர் கிடைக்காமல் சாலையோரங்களிலும், உணவங்களின் வாயிலிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனா தாக்கத்தால் உணவகங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்தது போல், ஸ்விகி, ஜூமாட்டோ, உபேர் ஈட்ஸ் போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்வதும் குறைந்துள்ளது. இதனால் உணவு வேளைகளில் பரபரப்பாக சுற்றும் டெலிவரி பாய்கள் சாலையோரம் அமர்ந்து ஓய்வு எடுத்து வருகின்றனர்.
ஊழியர் ஒருவர், நாளொன்றுக்கு சராசரியாக 40 வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகித்து வந்த நிலை மாறி இன்று ஒன்றிரண்டு ஆர்டர் தான் வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்டரில் கிடைக்கும் கமிஷன் தான் வருமானம் என்ற நிலையில் பெரும்பாலான ஊழியர்களுக்கு ஒரு ஆர்டர் கூட கிடைக்காமல் பொழுதை கழிக்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில் பணிபுரியும் தங்களுக்கு முககவசமோ, கைகளை சுத்தம் செய்யும் திரவமான சானிடைசர்களே வழங்கப்படவில்லை என்று டெலிவரியில் ஈடுபடும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர் பாதுகாப்பே முக்கியம் என குறிப்பிட்டு ஸ்விகி நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று வராமல் தடுக்கும் வகையில் முக கவசம் வழங்கி இருப்பதாகவும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய போதுமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதன் இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஆனால் எதார்த்தத்தில் டெலிவரி ஊழியர்கள் அவ்வாறு களத்தில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, ஸ்விகி நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஊழியர்களுக்கு தேவையான முக கவசம் உள்ளிட்டவை விரைவில் வழங்கப்படும் என்றும், அதே வேளையில் வாடிக்கையாளர்கள் அச்சப்படாமல் ஆன்லைன் மூலம் உணவுகளை வாங்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.
கொரோனாவால் டெலிவரி ஊழியர்களை நேரில் சந்திக்க தயக்கமிருப்பதால், உணவை வீட்டின் கதவிற்கு வெளியில் வைத்துவிட்டு வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துவிட தங்களது டெலிவரி ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உணவு அத்தியாவசியம் என்பதால் அவற்றை வாங்குவதை தவிர்க்க முடியாது, அதே வேளையில் உணவகங்களில் உணவை பார்சல் செய்பவர் முதல் டெலிவரி ஊழியர் வரை அடிக்கடி கைகளை சுத்தும் செய்து கொண்டால் ஊழியர்களும் நோய் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துகொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.