தமிழகத்தில் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
2020-2021 நிதியாண்டில் செயல்படுத்த உள்ள திட்டங்களைச் சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்தார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லைத் தூற்றிச் சுத்தம் செய்ய 500 எண்ணிக்கையிலான நெல் தூற்றும் இயந்திரங்கள் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்படும் எனத் தெரிவித்தார்.
சென்னை தெற்குச் சரகத்தில் புதிதாக மதுரவாயில் மண்டலத்தை உருவாக்கி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் அலுவலகம் 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
நுகர்பொருள் வாணிபக் கழக ஆலைகளில் கருப்பு அரிசியை நீக்கும் அதிநவீன இயந்திரம் 18 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் எனக் குறிப்பிட்டார்.