தமிழ்நாட்டில் அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 16 எல்லையோர மாவட்டங்களில், எல்லைப் பகுதி திரையரங்குகள், வணிக வளாகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து திரும்புபவர்களை, தேவைக்கேற்ப 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் வசதிகளை விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எல்லையோர மாவட்ட சோதனைச் சாவடிகளில் நோய்க் கண்காணிப்புப் பணிகள், தூய்மைப்படுத்தும்பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தமிழ்நாட்டில் அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கவும், 16 எல்லையோர மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் வணிக வளாகங்கள் திரையரங்குகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரானா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட பல்வேறு துறைகளுக்கு உடனடியாக 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், அதனை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொது இடங்களுக்கு வரும் மக்களுக்கு நோய்த் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அத்தகையவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்கவும், வயதானவர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் தனி நபர் சுகாதாரத்தை பேணவும், கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொடவேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்க பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து தரப்பு மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே புதுச்சேரியிலும் மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.