நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட என்.பி.ஆர். சட்டத்தை சட்டமன்றத் தீர்மானம் கட்டுப்படுத்தாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள கேள்விகள் குறித்து மக்களிடையே அச்சம் நிலவுவதாகவும் அதனை அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் என்ன பிரச்சனை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், என்.பி.ஆர். நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு மாநில சட்டமன்றம் கட்டுப்பட்டது என்றும், அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற இயலாது என்றும் அவர் கூறினார்.
அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.