மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதே போல் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, கொள்கைப் பரப்புச் செயலாளரும் மக்களவை முன்னாள் துணைத் தலைவருமான தம்பிதுரை போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றொரு வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கோரி வந்த தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனிடையே திமுக சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிடும் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னைத் தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுகவினர் வேட்பு மனு தாக்கல் செய்தபின் அண்ணா சதுக்கத்தில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.