மலேசியாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த இளைஞருக்கு கொரோனோ அறிகுறி இருந்ததால், அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசியாவில் பணியாற்றி வருகிறார்.
கோவை ஜெம் மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து அங்கிருந்து கோவை விமான நிலையம் வந்தவரை பரிசோதித்த போது, அவருக்கு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அவரை, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தனி பிரிவில் வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அவரது சளி, ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த 40 வயது நபர் ஒருவருக்கும், கல்லூரி மாணவர் ஒருவருக்கும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்தில் கொரானா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
இதனை போக்கும் விதமாக, நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு முகாமில், வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியவுடன் கைகளை எவ்வாறு சுத்தப்படுத்திக்கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொது இடங்கள், பேருந்துகளில் கிருமி நாசினி மருந்து அடித்தும், விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டன.