ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2 டன் செம்மர கட்டைகள் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பறிமுதல் செய்யப்பட்டன.
காட்பாடி - சேர்க்காடு சந்திப்பு சாலையில் திருவலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பத்திரிகை என்பதை குறிக்கும் வகையில்‘பிரஸ்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த சைலோ காரை போலீசார் மடக்கியபோது, அதில் இருந்த இருவர் தப்பி ஓடினர்.
அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த வேன் ஒன்று சாலையில் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த இருவரும் தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வேனை சோதனையிட்டதில் 2 டன் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டது. விசாரணையில், போலீசார் இருக்கிறார்களா என்பதை நோட்டமிட "பிரஸ்" என ஒட்டப்பட்ட காரில் இருவர் வந்ததும், அவர்களை பின் தொடர்ந்து செம்மர கட்டைகள் கடத்தப்பட்ட வேன் வந்ததும் தெரிய வந்துள்ளது.