தமிழகத்தில் இதுவரை கொரானா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விமான நிலையங்களை தொடர்ந்து, துறைமுகங்கள், ரயில் நிலையங்களிலும் பரிசோதனை செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், கொரானா சிறப்பு பரிசோதனை மையத்தில் பயணிகளுக்கு நடைபெறும் சோதனைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரானா குறித்து அச்சம் வேண்டாம் என்றும் அதே சமயம் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கொரானா சிறப்பு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
80 விழுக்காடு கிருமிகள் கைகள் மூலமே பரவுகின்றன எனக் கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் கூறினார்.
குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.