குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அனுமதியின்றி நடைபெறும் இந்த போராட்டத்தின் மூலம் பொதுமக்கள் பாதிக்கபடுவதாகவும் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் திருப்பூர் போராட்டம் காரணமாக பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைவர் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அளித்த கோரிக்கை மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் தொடர் போராட்டம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகள், அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்தாதது ஏன் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் காவல்துறையை எது தடுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினர். அத்துடன் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோரை கைது செய்யும்படியும் காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.