மேட்டூர் உபரி நீரால் 100 ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்பும் வகையில் 565 கோடி ரூபாய் மதிப்பிலான சரபங்கா நீரேற்றுத் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மழைக் காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரைக் கொண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள வறட்சிப் பகுதிகளில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் வகையிலான சரபங்கா நீரேற்றத் திட்டம் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஏரிகள் மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை விட உயரத்தில் உள்ளதால் கால்வாய்கள் மூலம் நீரைக் கொண்டு செல்ல இயலாது. எனவே மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்தே தண்ணீரை கொண்டு செல்ல முடியும்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த இருப்பாளி கிராமத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரபங்கா நீரேற்றுத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இத்திட்டத்தின் மூலம் மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் சுற்றுவட்டாரங்களில் 100 ஏரிகள் நிரப்பப்படவுள்ளன. இதன்மூலம் 4238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடிநீர் பற்றாக்குறையும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவில் பேசிய முதலமைச்சர், சாரபங்கா திட்டம் 11 மாதங்களில் நிறைவேற்றப்பட்டு பலன் அளிக்கத் தொடங்கும் என்றும் தெரிவித்தார். சரபங்கா திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நீரேற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தான் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா முதலமைச்சர்கள் சந்தித்துப் பேசி அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.