தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மதுபோதையில், இடுப்பில் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து நடு சாலையில் படுத்து உறங்கிய குடிகார ஜின் ஜான் குழந்தையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை நான்கு முனை சந்திப்பு பகுதி சாலையை வீடாக நினைத்து, போக்குவரத்துக்கு இடையூறாக போதையில் படுத்து உறங்கிய குடிகார சின் ஜான் இவர்தான்..!
தனது இடுப்பில் கட்டி இருந்த வேட்டியை அவிழ்த்து சாலை நடுவே விரித்து, அரைடாயருடன் படுத்து உறங்குவதில் ஆர்வம் காட்டிய இந்த குடிகார குழந்தை, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் வீதியில் துயில் கொள்வதற்கு டாஸ்மாக் சரக்கு தான் காரணம்.
பொது நலன் கருதி பொறுப்புடன் இருவர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அந்த குழந்தையை தட்டி எழுப்ப முயற்சித்தனர். போதை குழந்தையோ எழுந்திருக்க மறுத்து அடம் பிடித்து குத்துக்கல் போல சாலையிலேயே அமர்ந்து கொண்டது.
இதையடுத்து குடிகார குத்துக்கல்லை சட்டென்று அலேக்காக தூக்கிச்சென்று சாலையின் ஓரத்தில் வீசிச்சென்றனர் அந்த பாகுபலிகள்..!
ஆனால் அந்த குடிமகனோ தான் படுத்திருந்த நடு ரோட்டிற்கே சென்று மீண்டும் கச்சிதமாக வேட்டியை விரித்து படுத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்ய தொடங்கினார்.
குடிகாரர் சகவாசம், முழு நாசம் என்பதை உணர்ந்த வாகன ஓட்டிகள் ஒதுங்கிச் சென்றுகொண்டிருக்க, தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் நடத்திய 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் பலன் அளிக்கவில்லை..!
ஒரு கட்டத்தில் பள்ளி செல்வதற்கு படுக்கையை விட்டு எழுப்பும் அம்மாவிடம், எழுந்திருக்க அடம் பிடித்து புரண்டு படுப்பது போல குப்புரக்கா கவிழ்ந்து படுத்துக் கொண்டது அந்த போதை குழந்தை..!
குடிகார குசும்பனின் சேட்டையால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மூன்றாம் கட்டமாக அதிரடி ஆக்ஷனில் இறங்கினர், குடிமகனின் கையையும், காலையும் பிடித்து சாலையில் தரதரவென்று இழுத்துச்சென்று சற்று தூரம் சென்று தூக்கி வீசினர். ஊர் ஒன்று கூடியதால் நிலமையின் விபரீதத்தை உணர்ந்த குடிகார குழந்தையை அங்கிருந்து தப்பி தலைமறைவானது..!
குடிகாரர்களின் குறும்பு பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் குடி குடியை கெடுக்கும், குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்பதை பாட்டிலில் மட்டும் அச்சிடாமல் அனைவரின் மனதிலும் பதியவைத்தால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நலம் பயக்கும்..!