விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் 35 பேர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் இருவர் உள்பட 39 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் நடந்த குரூப் 4 மற்றும் குரூப் 2 முறைகேட்டில் கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள், காவலர்கள், புரோக்கர்கள் உள்ளிட்ட 46 பேரிடம் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார், வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதன் அடிப்படையில் விஏஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 39 பேர் கொண்ட விசாரணை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள 35 பேர், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள் இருவர் மற்றும் இரு புரோக்கர்கள் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து 39 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஒவ்வொருவரிடமும் 10 நாட்கள் வீதம் விசாரணை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே விஏஓ தேர்வு முறைகேடு வழக்கில் கடந்த வாரம் 3 ஆவது முறையாக கைதுசெய்யப்பட்ட புரொக்கர் ஜெயக்குமார் மற்றும் அரசு ஊழியர் ஓம்காந்தன் ஆகியோர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது சிபிசிஐடி போலீசார் 7 நாட்கள் காவல் கேட்டு மனு செய்தனர். ஆனால் 5 நாள் காவல் வழங்கிய நீதிமன்றம் மீண்டும் வெள்ளிக்கிழமை ஆஜர் படுத்த உத்தரவிட்டது.